
காஜாங், மார்ச் 22-
பண்டார் மாக்கோத்தா செராஸில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 14.15மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒரு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகக் கும்பலையும் போலீஸ் முறியடித்துள்ளது.
இது இவ்வாண்டின் மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கையாகும் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ காவ் கொக் சின் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட 33 மற்றும் 44 வயதுடைய 2 ஆடவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போதைப்பொருள் கிடங்காக வைத்திருக்கும் ஆடம்பர அடுக்குமாடி வீட்டையும் போலீஸ் சோதனையிட்டது.
அந்த வீட்டில் சோதனையிட்டதையடுத்து 362 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் ஷாபு (332.4 கிலோ), எம்.டி.எம்.ஏ. தூள் (6.07 கிலோ) எரிமின் 5 மாத்திரை (8.1 கிலோ), எக்ஸ்டசி மாத்திரை (15.7 கிலோ) ஆகியவை அடங்கும். இவை 14.15மில்லியன் வெள்ளி மதிப்புள்ளவை என்று கூறப்பட்டுள்ளது.
இவர்கள் போதைப்பொருள் கையிருப்பை அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்றுப் பகுதிகளுக்கும் சந்தைப்படுத்துகின்றனர். இவர்களுக்கு அண்டை நாடுகளிலிருந்துதான் இந்த கையிருப்பு கிடைத்திருக்ககூடும் என்று நம்பப்படுகிறது.
போலீஸ் மேற்கொண்ட விசாரணைபடி இக்கும்பல் கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து தீவிரமாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்தாண்டு டிசம்பரில் மேற்கொண்ட உளவு நடவடிக்கையில் இவர்களின் செயல் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட இருவரும் கிடங்கு பாதுகாவலர்களாக மட்டுமின்றி போதைப்பொருளை அனுப்பி வைப்பவர்களாகவும் ஓட்டுநர்களாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் போதைப்பொருளை அனுப்பி வைக்கும் போது இவர்களுக்கு 3,000 வெள்ளி வரையிலான கமிஷன் தொகை கிடைக்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை 1.8 மில்லியன் வரையிலான போதைப்பித்தர்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் சிறுநீரைப் பரிசோதித்ததில் இவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது. இவர்களின் குற்றப் பதிவைப் பார்த்த போது 33 வயதுடைய ஆடவன் மீது 4 குற்றப் பதிவுகள் காணப்பட்டன.
இச்சோதனையில் 38,000 வெள்ளி மதிப்புள்ள ஒரு பெரோடூவா மைவி காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
“தற்போதைக்கு இக்கும்பலின் முக்கியப் புள்ளியை நாங்கள் தீவிரமாகத் தேடி வருவதோடு போதைப்பொருள் கையிருப்பு கிடைக்கும் இடம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் .
இவர்கள் இருவரும் வரும் 25ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். இச்சம்பவம் 1952 அபாயகர போதைப்பொருள் சட்டம், 39பி பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் காவ் கொக் சின் குறிப்பிட்டார்.