
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று உரிமை கட்சியின் தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
உள்துறை அமைச்சு, தேசிய போதைப் பொருள் ஒழிப்பு ஏஜென்சியின் கீழ் இந்த தனியார் மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இம்மையத்திற்குள் சென்ற பல இளைஞர்கள் கொடூரமாக அடித்துக் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவருக்கு கண் பார்வையே இழக்கும் வரை தாக்கப்பட்டுள்ளனர். சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளனர். ரத்தம் கொட்டும் வரை அடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஏதும் வழங்கப்படவில்லை.
இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் 48க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதில் 18 பேர் மட்டும் வெளியே வந்துள்ளனர். இன்னும் பலர் அம்மையத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியமான விவகாரத்தை விசாரிக்க சார்ஜன் அந்தஸ்து கொண்ட அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளனர்.
மறுவாழ்வுக்காக சென்றவர் இப்படி கண்மூடித்தனமாக பாதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உள்துறை அமைச்சு ஏன் இவ்வளவு அலட்சியமாக உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. குறிப்பாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதுபோன்ற விவகாரத்தை ஏன் கண்டுக் கொள்வது இல்லை.
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டும். போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக அந்த மறுவாழ்வு மையம் மூடப்பட வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கை என்று பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினர்.