காப்பார் பட்டணத்தில் ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்தின் 62ம் ஆண்டு பங்குனி உத்திரம் பிரமோற்சவ திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்த மெய்யன்பர்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையை தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டனர். . அதற்கு இணங்க பண்டார் பாரு கிள்ளான் மற்றும் மேரு வட்டார இந்திய கிராமத்தலைவர்களின் ஆதரவோடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இக்கூடாரத்திற்கு வடகிள்ளான் காவல்துறை தலைவர் துவான் ASP விஜயராவ் ,மேரு சட்டமன்ற உறுப்பினர் புவான் மரியம் , ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும் மலேசிய அரிமா இயக்கத்தின் தோற்றுநருமான செந்தமிழ்ச்செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் கோலசிலாங்கூர் மெலாவாத்தி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் திரு. தீபன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தார்கள். நண்பகல் மற்றும் இரவு உணவிற்கும் குளிர்பானம் விநியோகித்த அனைத்து கிராமத்து தலைவர்கள் மற்றும் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையின் செயலவையினர் அனைவருக்கும் வட்டாரத்தலைவர் விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் அவர்கள் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.