
தமிழக மக்களுக்கு அனைத்து அரசியல் உரிமைகளும் பெற்றுதர, அதற்காக இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப, தமிழகத் தமிழர்கள் தமிழர் தேசியம் வழிநின்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய திருநாட்டில் இதுவரை எந்த கட்சியும் செய்ய துணியாத, யாருடனும் கூட்டணி இன்றி தனித்து நிற்பதோடு, ஆண் பெண் என சம வேட்பாளர்களை நிறுத்தி, அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் தமிழக நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதி நடைபெறவுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் அவர்களது “ஒலிவாங்கி” (மைக்) சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பம் என தெரிவித்தார்.
திறனற்ற நிர்வாகத்தாலும் கேட்பாரற்ற இந்திய வெளியுறவு கொள்கையாலும், கச்சா தீவு இழப்பு, மீனவர் படுகொலை, குடியுரிமை சட்ட மசோதா, அபாயகரமான அணு உலை நிர்மாணிப்பு, வெள்ளம், காசா புயல், யோகி புயல் போன்ற இயற்கை பேரிடரால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உரிய நிவாரணம் புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, வேலை வாய்ப்பின்மை, அரசுத்துறை அடக்குமுறைகள், பணமதிப்பிழப்பு, GST வரி, பெட்ரோல் டீசல், கேசு சிலிண்டர் விலைவாசி உயர்வு, மற்றும் நீட்த்தேர்வு, எட்டுவழிச்சாலை, வேளாண் மசோதா, தமிழக பணியில் வட மாநிலத்தவர்கள் நியமனம், புதிய கல்வி கொள்கை, டெல்டா பகுதிகள் கார்ப்ரேட்டுகளுக்கு தானம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் போன்ற எண்ணற்ற இன்னல்களை இடையூறுகளை தமிழக மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

இவை அனைத்தையும் விட, தமிழீழ இனப்படுகொலைக்கு உடந்தையாக சிங்கள பவுத்த இனவெறி அரசுக்கு துணை நின்றது மற்றும் காவேரி மேலாண்மை சிக்கலில் இரட்டைப் போக்கு அரசியலையும் தமிழக மக்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தமிழர் தேசியம் வளர்ந்து விடக்கூடாது என திட்டமிட்டு சின்னத்தை முடக்குவது நாம் தமிழர் பிள்ளைகளுக்கு (NIA) சோதனை வழி அச்சுறுத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். ஆகவே தமிழக தமிழர்களுக்கு ஒரே கடைசி வாய்பாக ஓட்டுரிமை வழியில் நமது உரிமை, உடமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்றவற்றை தற்காக்க வேண்டும்.
எனவே, தமிழக மக்கள் “ஒலிவாங்கி” (மைக்) சின்னத்தில் போட்டியிடும், நம்மிலிருந்து வந்த எளிய பிள்ளைகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, நாளைய தலைமுறை பிள்ளைகள் நல்வாழ்வுக்காக விருப்பு வெறுப்பின்றி தமிழர் தேசிய இனமகனாய் உழைக்க வேண்டும். அதற்கு உலக தமிழர்கள் அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும். அவ்வரிசையில் மலேசிய தமிழர்கள் சார்பில் சில விழிப்புணர்வு முன்னெடுப்புகளை செய்து வருவதையும் உலக தமிழர் பாதுகாப்பு செயலகம் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.