செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
நோன்பு பெருநாளுக்கு பின்னர் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனல் பறக்க போகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியர்கள் 18 சதவீத வாக்காளர்களாக இருக்கலாம், ஆனால் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கும் பலம் அவர்களிடம் உள்ளது.
கடந்த 2023இல் நடந்த மாநிலத் தேர்தல்களில் PH தலைமையிலான கூட்டணிக்கு இந்திய ஆதரவு குறைந்தது,கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வரவிருக்கும் KKB இடைத்தேர்தலில், 50 சதவீத இந்திய வாக்காளர்கள் PH/DAP-யை ஆதரிக்காமல் விலகிவிட்டால், எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி உறுதியாகிவிடும் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கூறுகிறார்.
இடைத்தேர்தலில் PH/DAPக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று இந்தியர்கள் நினைக்கிறார்களா என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மாநிலத் தேர்தல்களில், டிஏபியில் முக்கிய இந்தியத் தமிழ்த் தலைவர்கள் கைவிடப்பட்டது இந்திய வாக்காளர்களின் மத்தியில் சரிவை ஏற்படுத்தியது. பெரிக்காதான் கூட்டணியை ஆதரிக்கும் போக்கை இந்தியர்கள் தொடருவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.