
சென்னை: தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை செய்ததால் கடும் சரிவு என தமிழக பாஜக மீது ஏராளமான புகார்கள் டெல்லி தலைமைக்கு சென்றுள்ளதால், கடும் கோபத்தில் உள்ள அமித்ஷா, மோடி ஆகியோர் முழுமையாக கட்சியை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பாஜக என்ற அமைப்பே இல்லாமல் இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி குறித்த பேச்சு மாநிலம் முழுவதும் எழுந்தது. ஆனால் கட்சி வளரவில்லை.
முருகன், மாநில தலைவராக வந்த பிறகு ஓரளவு மாற்றுக் கட்சியினர், பாஜகவில் இணைந்தனர். அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், 4 எம்எல்ஏக்கள் கட்சிக்கு கிடைத்தது. பின்னர் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் பாஜக 7 இடங்களைப் பிடிக்கும் என்று அண்ணாமலை கூறினார். இதை நம்பித்தான் 8 முறை தமிழகத்துக்கு மோடி பிரச்சாரம் செய்தார். தற்போது தேர்தல் முடிந்து விட்டது.
தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையே 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்ற தகவல் மேலிடத்துக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.