ரியாத், ஏப் 30-
இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் காயமுற்ற பாலஸ்தீன மக்களுக்கு சிகிச்சையளிப்பதில் கட்டார் மற்றும் இதர மேற்காசிய நாடுகளுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார ஆய்வரங்கின் சிறப்புக் கூட்டத்தின் இடைவேளையில் கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸிம் அல் தானியுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த வாக்குறுதியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் மலேசியரான நுருள் அய்ன் ஹருண் காஸாவிலிருந்து பத்திரமாக வெளியேறுவதில் பெரும் பங்காற்றியதற்காகக்
கட்டாருக்கு பாராட்டுதலையும் நன்றியையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த சந்திப்பின்
போது தெரிவித்துக் கொண்டார்.
பாலஸ்தீன விவகாரத்தில் கட்டார் ஆற்றி வரும் மத்தியஸ்தர் பணிக்குத் தனது முழு ஆதரவை மலேசியா வழங்கும் என்றார் அவர்.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் மலேசியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை 100 டன் உதவிப்
பொருள்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ள வேளையில் மேலும் 20 டன் பொருள்களை கடல் மார்க்கமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
பெர்னாமா