
செ.வே.முத்தமிழ் மன்னன்
சிரம்பான், மே 7-
இந்திய சமுதாயத்தின் சமூக நல உதவி திட்டங்களுக்கு மித்ராவில் 1 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று மித்ரா தலைவர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு மித்ராவின் வாயிலாக நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்திற்கு 7 லட்சம் ஒதுக்கப்பட்டது.
சிறு தொழில் வணிகர்கள் வியாபாரம் செய்ய பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 125 சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்பட்டது.
அதன் அறிமுக விழா நேற்று சிரம்பானில். நடைபெற்றது.
இந்த திட்டம் வெற்றி கண்டால் வரும் காலத்தில் இன்னும் அதிகமான தொழில் முனைவர்களுக்கு உதவும் முயற்சிகளை மித்ரா மேற்கொள்ளும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.
பாலர் பள்ளிகளுக்கான நிதியுதவி, உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான கல்வி உபகார சம்பளம், சிறுநீரக நோயாளிகளின் டயாலிசிஸ் நிதி ஆகிய திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனாக இருந்தது.
ஆகவே இந்த திட்டங்களை
இவ்வாண்டு மீண்டும் மித்ரா தொடரும்.

அதேவேளையில் பல புதிய திட்டங்களையும் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மித்ரா மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதனிடையே
வருங்காலத்தில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக சங்கத்திற்கு மித்ரா கூடுதலான நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.