கெடா மாநிலத்தில் உள்ள பேட்னோக் தமிழ்ப்பள்ளியை மூடும் நோக்கத்தில், மேலாளர் வாரியத்தின் பதிவை இரத்து செய்த கல்வி இலாகாவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீரய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீராய்வு மனுவின் முதல்கட்ட விசாரணை நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அமர்ஜீட் சிங் நேற்று தீர்ப்பளித்தார்.
கெடாவின் கோலக்கெட்டில் அருகில் உள்ள பேட்னோக் தோட்டத்தில் 80 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த தமிழ்ப்பள்ளி மாணவர் இன்றி எந்நேரத்திலும் மூடப்படலாம் என்ற அபாயத்தில் இருந்த வேளையில், அப்பள்ளியை காப்பாற்றும் நோக்கத்தில் மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டது. அப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலமும் பினாங்கு மாநிலத்தின் தாமான் பாகான் பகுதியில் பெறப்பட்டது. முதலில் பள்ளியை இடம் மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாத கல்வியமைச்சு, திடீரென கெடா மாநில கல்வி இலாகாவின் வாயிலாக பள்ளியின் மேலாளர் வாரிய பதிவை இரத்து செய்தது. இதனை எதிர்த்து பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். நேற்று இவ்வழக்கு நீதிபதி டத்தோ அமர்ஜீட் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நேற்றைய வழக்கில் பள்ளியின் மேலாளர் வாரியம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் சம்ஷேர் சிங் மறறும் ஶ்ரீமுருகன் அழகன் ஆகியோர், பள்ளி மேலாளர் வாரியத்தின் பதிவை இரத்து செய்ததின் வழி, கல்வி இலாகா இப்பள்ளியை நிரந்தரமாக மூடுவதற்கு எத்தனிக்கிறது என்பது தெளிவாக தெரிவதால், சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதோடு, வாரிய பதிவை இரத்து செய்த முடிவுக்கு எதிராக இடைக்கால தடையும்
கோரி வாதிட்டனர். மத்திய அரசின் வழக்கறிஞர் இடைக்கால தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்வரும் 17 நவம்பர் அன்று இடைக்கால தடை குறித்து விசாரணை செய்யப்படும் என்று தீர்ப்பளித்தார். இடைக்கால தடை மீதான தீர்ப்பும் அன்றைய தினமே வழங்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை மூடுவதில் கல்வி அமைச்சு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என, வழக்கை பார்வையிட வந்திருந்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கேள்வியெழுப்பினார். பேட்னோக் தமிழ்ப்பள்ளிக்கு பாகான் டாலாம் பகுதியில் 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது; கட்டடம் கட்டுவதற்கு நிதியையும் நாங்களே பார்த்து கொள்கிறோம் என பள்ளி வாரியம் சொல்லி விட்டது; இருந்தும் இந்த பள்ளியை இடம் மாற்றக்கூடாது, மூடித்தான் ஆக வேண்டும் என கல்வியமைச்சு துடிப்பது ஏன் என அவர் மேலும் கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் பிரதிநிதிகள் நாங்களே என்று மார்தட்டி கொள்ளும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், பேட்னோக் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் வாய்மூடி இருப்பதன் காரணம்தான் என்ன? இது அரசியல் விவகாரம் அல்ல; ஒரு தமிழ்ப்பள்ளியை நாம் இழக்க போகிறோம் என தெரிந்திருந்தும் மஇகா தலைவர்கள் அமைதியாக அதை வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது என சத்தீஸ் முனியாண்டி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய வழக்கு விசாரணையில் மனுதாரர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். பேட்னோக் தமிழ்ப்பள்ளியை காப்பாற்ற இறுதிவரை போராட பள்ளி வாரிய உறுப்பினர்கள் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.