தி ஹேக், மே 15 – காஸா போரின் போது ராஃபா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக தென்னாப்பிரிக்கா கோரியுள்ள புதிய அவசர நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணை நடத்தும்.
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதலின் போது இஸ்ரேல் இனப்படுகொலை தொடர்பான பிரகடனத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அனைத்துலக நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வரும் வியாழக்கிழமை உரையாற்றவுள்ளது. ராஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவும், ஐ.நா அதிகாரிகள், மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புகள், பத்திரிகையாளர்கள், விசாரணையாளர்கள் தடையின்றி காசாவில் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கடந்த வாரம் நீதிமன்றத்தில் அந்நாடு கோரிக்கை விடுத்திருந்தது.
நீதிமன்ற அட்டவணையின்படி இஸ்ரேல் தனது தரப்பு வாதத்தை வெள்ளிக்கிழமை முன்வைக்கும். காஸா போரில் கிட்டத்தட்ட 35,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Reuters