ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
நான்கு முறை துப்பாக்கியால் சுட்டத்தில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் ராபர்ட் பிகோ சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரதமர் ராபர்ட் பிகோ சுடப்பட்ட சம்பவத்தை பாராளுமன்றத்தில் சபாநாயகர் உறுதிப்படுத்தியதுடன், அடுத்த அறிவிப்பு வரும்வரை சபையை ஒத்தி வைத்தார்.
பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.