காளிதாஸ் சுப்ரமணியம்
ஈப்போ, மே.21: இங்குள்ள ராஜா பெர்மாய்சூரி பைனுன் பொது மருத்துவமனைக்கு 7 செவிதிறன் பரிசோதனை கருவிகளை வழங்கி உதவினர் ஈப்போ கிரின்டவுன் ரோட்டரி கிளப் சங்கத்தினர்.
இந்த மருத்துவமனையில் இக்கருவியின் பற்றாக்குறை நிலைப்பாடு உருவாகி வந்தது. அதன் அடிப்படையில் இங்கு பிறக்கும் சிசுகளின் செவிதிறனை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த கருவிகளை அன்பளிப்பு செய்துள்ளதாக ஈப்போ கிரின்டவுன் ரோட்டரி கிளப் தலைவர் நாகராஜன் தண்ணீர்மலை கூறினார்.
செவிதிறன் விவகாரத்தில் சிசுகளின் காதுகளை இந்த கருவிகள் வாயிலாக பரிசோதனை செய்ய ஏதுவாக அமைகிறது.
இங்குள்ள ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் 2020 ம் ஆண்டின் ஆய்வின் அடிப்படையில் 9876 சிசுகள் பிறந்துள்ளனர். அவற்றில் 4858 அதாவது 49.2 சதவீத சிசுகளுக்கு மட்டுமே இந்த செவிதிறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கருவிகள் பற்றாக்குறையால் மற்ற சிசுகளுகளுக்கு பரிசோதனை செய்ய இயலவில்லை என்று இந்த ஆய்வின் வாயிலாக அறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனைக்கு இரு வகையான மாறுபட்ட பயன்களை வழங்கும் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றில் காதுவரை கேட்கும் சக்தி இருக்கிறதா என்று அறிய 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ( OAE) 5 கருவிகள் வழங்கப்பட்டன.
இக்கருவி காது பகுதியில் சிசுவிற்கு கேட்கும் சக்தி உள்ளதா என்று கண்டறியக்கூடியது. மற்றொன்று 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ( AABR) 2 கருவிகள் வழங்கப்பட்டது.
இக்கருவி சிசுவின் மூளை வரை சென்று பரிசோதனை மேற்கொள்ளக்கூடியது என்ற தகவலை அவர் பகிர்ந்தார். இத்திட்டம் மனிதநேய அடிப்படையை கொண்டது. அதோடு, சிசுகளுக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த அடிப்படையில் அனைத்துலக மற்றும் உள்ளூர் கிளப்புகள் ஆதரவு வழங்கினர்.
அதனால், உதவிகள் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் ரோட்டரி் மேம்பாட்டு வாரியத்தின் ஆசியோடு அங்கீகாரம் கிடைத்தது என்று அவர் மகிழ்ச்சிகரமாக தெரிவித்தார்.
இந்த நிதியுதவியின் உதவியோடு ஈப்போ கிரின்டவுன் ரோட்டரி கிளப் 7 கருவிகளை வாங்கி ஈப்போ மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்தது. தற்போது இந்த கருவிகள் மருத்துவமனையின் உடமையாகவும், பராமரிக்கும் உரிமையும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.