


கோலாலம்பூர், ஜூன் 2 –
உலக அன்னையர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிலாங்கூர் – லிலாயா மாநில ஏற்பாட்டில் அன்னையர் – ஆசிரியர் தினம் நேற்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பிரிக்பீல்ட்ஸ் கண் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒற்றுமை துறை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் தனிச் செயலாளர் தினேஷ் தலைமைத் தாங்கினார்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் மற்றும் துணை தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை மலேசிய தெலுங்கு சங்கத்தின் சிலாங்கூர் – விலாயா மகளிர் அணியும் இணைந்து முழு ஆதரவு வழங்கியது.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி தமது வரவேற்பு உரையில் இந்த நிகழ்வு வெற்றி பெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் மகளிர் அணி தலைவி டாக்டர் கெளசல்யா தமது உரையில் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த விலாயா – சிலாங்கூர் மகளிர் அணியையும் அதன் தலைவர் கிருஷ்னா யாவை வெகுவாக பாராட்டினர்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் தமது உரையில் அன்னையர் மற்றும் ஆசிரியர்களின் தியாகங்களை போற்றும் வகையில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் திருமதி பெனு மற்றும் சிலாங்கூர் – விலாயா மாநில தெலுங்கு சங்கத்தின் தலைவர் வி.கே. கிருஷ்ணா ராவ் ஆகியோரும் உரையாற்றி அன்னையர்களை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்ட அன்னையவர்கள் மற்றும் ஆசியர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.