கோலாலம்பூர் ஜூன் 6-
கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ எனும் இந்நூலில் அறிவியல் ஆய்வுகள் உணர்ந்தும் உளவியல் உண்மையின் அடிப்படையில் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகள் எழுதப்பட்டுள்ளன.
பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்திவரும் பெற்றோர் , தங்கள் பிள்ளைகளின் மன உணர்வுகளையும் மனநலத்தையும் பற்றி அறிந்திருப்பதில்லை. வளரும் தங்கள் பிள்ளைகளின் நடத்தையில் முரண்பாடு ஏற்படும்போது , பெற்றோர்களுக்கு மனக்கவலையுடன் பயமும் பதற்றமும் ஏற்படுகின்றது.
இதற்கான காரணிகளைத் தெளிவுற விளக்கத்துடன் விவரித்து, அதற்கான ஆலோசனையையும் இந்நூல் பரிந்துரைக்கின்றது. இந்நூலில் ‘சிந்தனைக்கு ஒரு நிகழ்வு’ எனும் தலைப்பில் 32 உண்மைச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை, பெற்றோரியல் அணுகுமுறைகளுக்கு உரமூட்டுவதுடன், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இடைநிலைப்பள்ளி மாணவர்கள், தனிநபர்கள்; திருமணம் புரியவிருப்பவர்கள்; தம்பதியர்; பெற்றோர்கள்; தாத்தா-பாட்டி; ஆசிரியர்கள்; பல்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் , என அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
இந்த நூல் வெளியீட்டு விழா வரும் ஜூன் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகிறது என்று நூல் ஆசிரியர் கே.ஏ.குணா தெரிவித்தார்.