
கோலாலம்பூர், ஜூன் 9-
அண்மையில் எஸ் பி எம் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
பல சவால்களுக்கு இடையே சிறப்பு பயிற்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பயில விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். கடந்த காலத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் 2,500 இடங்களை வழங்கி உதவி புரிந்தார்.
பின்னர் இந்த இடங்கள் படிப்படியாக குறைந்தன.
ஒட்டு மொத்த இந்திய சமுதாயம் குரல் கொடுத்ததில் மூலமாக போதுமான இடங்கள் இந்திய மாணவர்களுக்கு கிடைத்தது.
இவ்வாண்டும் மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்கள் எந்த வகையிலும் புறக்கணிக்கக் கூடாது என்பதே மைபிபிபி கட்சியின் வாதமாகும். திறமை வாய்ந்த மற்றும் சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சை கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய சமுதாயத்தின் மத்தியில் மெட்ரிகுலேஷன் விவகாரம் இன்னமும் பூதாகரமாக இருக்கிறது.தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்குமா என்று பல இந்திய பெற்றோர்கள் ஏக்கம் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்காமல் இருக்க கல்வி அமைச்சு ஆராய்ந்து தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு போதுமான இடங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.