

ஈப்போ, ஜுன்.9: ஈப்போ புந்தோங் ஜெயா கடைவீடு பகுதியில் இரு மாடிக்கட்டடத்தை ஈப்போ சைவ சமய மன்றத்தினர் மையமாக திறப்பு விழா கண்டது.
இந்த கட்டடத்தை 6 இலட்சம் ரிங்கிட்டிற்கு மேல் வாங்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டது.
இந்த மன்றத்தினர் சிறப்பாகவும், செம்மையாகவும் சைவ சமயத்திற்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றும் தொண்டுக்கு பாராட்டப்பட வேண்டும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட முத்துசாமி உத்திராபதி கூறினார்.
இந்த கட்டடம் வளர்ச்சிக்கு மற்றும் தேவைக்கு பேராக் மாநில அரசு நிதியுதவி வழங்கி உதவியுள்ளது.
அத்துடன், இந்த மன்றத்தின் கட்டடம் வாங்கும் உன்னத நோக்கத்திற்கு நிதியுதவி வழங்கி உதவிய அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் கொடை நெஞ்சர்களுக்கு அவர் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த சைவ சமய மையம் மக்கள் சேவை மையமாக திகழ வேண்டும். குறிப்பாக, இங்கு சமய வகுப்புகள், மருத்துவ ஆலோசனைகள், பி40 குடும்பத்தாருக்கு உதவும் மற்றும் மனிதநேய திட்டங்கள் செயல்படுத்தினால் மேலும் சிறப்பாகும்.
இந்த பகுதி புந்தோங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிக இந்தியர்கள் வாழும் வட்டாரமாகும் என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் சைவ சமய கல்லூரி நிறுவ அரசாங்கம் அனுமதி
வழங்கியுள்ளது.
ஆனால், இந்த கட்டுமானப்பணிகள் 3 ஆண்டுக்குள் நிறைவு பெற வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைத்துள்ளனர். இதன் அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டபோது கூறினார்.
இந்த சைவ சமய கல்லூரி 5 கோடி ரிங்கிட் செலவில் கட்டுவதற்கு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த கட்டுமானப்பணிகள் மூன்று ஆண்டுக்குள் முற்றுப்பெற வேண்டும் என்பதால் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டம் சிறப்பாக முற்றுப்பெற பொதுமக்கள் நன்கொடை வழங்கி உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனின் பிரதிநிதி முத்துசாமி, முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஈப்போ சைவ சமய மன்ற தலைவர் மருத்துவர் எ.பழனியப்பன், இக்கட்டடக்குழு தலைவர் பெரி.ஏகாம்பரம், வழக்கறிஞர் மதியழகன் மற்றும் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், செயற்குழுவினர் சைவ சமய தொண்டர்கள் கலந்து சிறப்பித்தனர்.