


ஈப்போ, ஜுன்.14: அடுத்த மாதம் ஜுலை 21 ல், உலகத் தமிழ் எழுத்தாளர் தொடக்க விழா இங்குள்ள ஈப்போ கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இவ்விழாவை ஏற்று நடத்தும் ஈப்போ முத்தமிழ பாவலர் மன்றத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை மன்ற ஆலோசகர் க. அருள் ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டதாக, இந்நிகழ்வின் அறிமுக விழாவில் கலந்துக்கொண்டபோது பத்துகாஜா நடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
இந்த முத்தமிழ் பாவலர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான, தரமான சமூக நல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். அவர்களின் சேவை மேலும் தொடர வேண்டும் மற்றும் இத்தகைய சமூகநல நடவடிக்கைகள் வாயிலாக மக்கள் நன்மை அடைவார்கள் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வில் நூல் வெளியீடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் சுமார் 1000 பேராளர்கள் உள்ளூர் மற்றும் அந்நிய நாட்டவர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. அத்துடன், பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின், நிறைவுவிழாவில் பேராக் மாநில மலையாளி சமூக இயக்கத்திற்கு 8 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது. இம்மாத இறுதியில் பினாங்கில் நடைபெறவுள்ள மலேசிய மலையாளிகள் ஒன்றுகூடும் நிகழ்விற்கு இந்நிதி உதவும் என்று அவர் கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி, இந்நிகழ்வில்
முன்னாள் இராணுவ வீரர்கள் இயக்கத்திற்கு அதன் தலைவர் சுப்பிரமணியத்திடம் 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ.சிவகுமார். அதிகமான இந்திய இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கு இந்த இயக்கம் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.