

ஈப்போ, ஜுன். 24: சங்கீத பரத கலாஞ்சலி நடனப் பள்ளியில் பயின்ற பிரித்தியா மற்றும் திவியதா சகோதரிகள் தங்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை அங்கீகாரத்துடன் சிறப்பான படைப்பை வெளிப்படுத்தினர்.
இந்த பரத நடமணிகளின் குரு ஸ்ரீமதி உஷா நந்தினி கிருஷ்ணசாமி தலைமையில் கற்று தேர்ந்தவர்கள். இவர்கள் 4 வயது முதல் இந்த பரதக்கலையை கற்றவர்கள். அதன் பின் சலங்கை பூஜை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு சகோதரிகளின் தந்தை பி.சுந்தரசேகரர் பேராக் மாநில இந்து சங்க தலைவராவார். தம் பிள்ளைகளின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு இந்த பரதக்கலையை கற்றுத்தேற அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தம் பிள்ளைகள் இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறியும் பொருட்டு இந்து சமய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்ட வழிகாட்டியுள்ளார். அதன் பொருட்டு இந்த இரு சகோதரிகள் திருமுறை ஓதும் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பரத நடனத்தில் ஆர்வத்தை அதிக அளவில் காட்டினாலும் தங்களின் கல்வியிலும் சிறந்து விளங்கின்றனர் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.