
ஈப்போ, ஜுன்.25: இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தாயாரை கொன்றதாக வேலையில்லாத ஆடவர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
36 வயதான கே எஸ் சுகன், மாஜிஸ்திரேட் சிட்டி நோரா ஷெரீப் முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் தமிழில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது தலையசைத்தார்.
ஆனால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜூன் 12 ஆம் தேதி அதிகாலை 1.00 மணி முதல் 9.30 மணி வரை இங்குள்ள பெர்சாம், தாமான் ரெஸ்டு ஜெயா, டத்தாரன் தனா திமூர் 5 இல் உள்ள வீட்டில் எஸ். இந்திரா,( வயது 60), என்பவரின் மரணத்தை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம், 302வது பிரிவின்படி இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் ஆனால் 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நுரானிசா இஸ்மா முஹம்மது ஹுசைனி வழக்குத் தொடுத்தார்.
இவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை மற்றும் ரசாயன அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கான தேதியை அடுத்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்தது