
புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முதல்முறையாக மோடி தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமலேயே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படுகிறார்
.ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே நாடாளுமன்ற மரபுப்படி மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு பதிலடி தரும் வகையில் வேட்பாளரை நிறுத்தியது இண்டியா கூட்டணி. மக்களவை சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜகவின் பிடிவாதத்தால் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது