கோலாலம்பூர், ஜூலை 17-
ஈஷா எனப்படும் ராஜேஸ்வரிக்கு இணையம் வாயிலாக மிரட்டல் விடுத்த ஷாலினி பெரியசாமி என்பவருக்கு வெறும் 100 வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ம இகா தேசிய மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.
ராஜேஸ்வரி அல்லது ஈஷா என்று அழைக்கப்படும் பெண்ணுக்கு நீதி வழங்கப்படாதது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது
இந்த இணைய மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரான பி. ஷாலினி அல்லது ‘ஆல்ஃபா க்வின்’ என்ற பெண்ணுக்கு சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14ன் கீழ் RM100 அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் பாதிக்கப்பட்டவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளக் காரணமான குற்றத்துடன் ஒப்பிடும் போது, இந்தத் தண்டனை மிகவும் குறைவானது என்று சரஸ்வதி விவரித்தார்.
“இந்த தண்டனை நியாயமற்றதாகக் கருதப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இணைய அச்சுறுத்தலின் விளைவுகளின் தீவிரத்தை பிரதிபலிக்காது என்று அவர் சொன்னார்.
“சைபர் மிரட்டல் என்பது பாதிக்கப்பட்டவரின் மீது ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குற்றமாகும்.
இதில் மன உளைச்சல் மற்றும் தீவிர நிகழ்வுகளில், இன்று நடந்தது போல் உயிர் இழப்புக்கு வழிவகுக்கும்.
பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு வெறும் RM100 தான் மதிப்பா” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இணைய மிரட்டல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜொகூர் மாநில கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.
“சைபர்புல்லிங் ஒருபோதும் அனுமதிக்கப்படாது, குற்றவாளிகள் எந்த சூழ்நிலையிலும் செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெற வேண்டும் என்ற தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.
இணைய அச்சுறுத்தல் தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய அமைச்சர்கள் அமைச்சரவை வலியுறுத்தி இருந்தாலும் அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், சைபர் மிரட்டல் தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், விதிக்கப்பட்ட தண்டனை ஒரு பாடமாக செயல்படவும், எதிர்காலத்தில் இணைய மிரட்டல் வழக்குகள் ஏற்படாமல் தடுக்கவும் அதிகாரிகளை ம இகா மகளிர் அணி கேட்டுக் கொள்கிறது.
“எங்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை தொடர்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
தற்போதைக்கு ஈஷாவுக்கு நீதி கிடைக்கவில்லை, ஆனால் இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.