
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூலை 23-
நாட்டில் புகழ் பெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தை பி.இராமன் வழிநடத்துவார் என்று தெமர்லோ உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் முன்னாள் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
டத்தோ தமிழ்ச் செல்வத்தின் தரப்பினர் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் தலையிட்டு எந்தவொரு பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என்று தெமர்லோ உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் பின் மாட் நோர் தனது இடைக்கால தடையுத்தரவை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் என்று இராமனின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் இருந்து எந்தவொரு தஸ்தா வேஜூகளை டத்தோ தமிழ்ச் செல்வம் எடுத்து செல்லக்கூடாது என்றும வழக்கறிஞர் செல்வம் சண்முகம் திட்டவட்டமாக அறிவித்தார்.
மாரான் மரத்தாண்டவர் ஆலய தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் டத்தோ தேவேந்திரன், சுப்ரமணியம், தர்ம கவுண்டர், ஹரிக்கிருஷ்ணன், புஷ்பா நாதன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மொத்தம் 24 பதவிகளுக்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரான் மரத்தாண்டவர் ஆலய தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைப்பெற்றது .
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இராமனுக்கு 250 வாக்குகள் கிடைத்தன.
டத்தோ தமிழ்ச் செல்வத்திற்கு 206 வாக்குகள் கிடைத்தன. ஐந்து செல்லாத வாக்குகள்.
ஆனால் கள்ள வாக்குகள் போட்டு விட்டார்கள் என கூறி தேர்தல் முடிவை அறிவிக்க மறுத்து விட்டார்கள்.
மறுநாள் ஜூன் 24 ஆம் தேதி குவாந்தான் ஆர்ஓஎஸ் அலுவலகத்தில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது.
அப்போது இராமனுக்கு 250 வாக்குகளும் தமிழ் செல்வத்திற்கு 204 வாக்குகளும் கிடைத்தன.
ஆனால் தேர்தல் அதிகாரி சுப்ரமணியம், டத்தோ எம்.பி. நாதன், டத்தோ தேவேந்திரன், தர்மா, ஹரிக்கிருஷணன் ஆகியோர் தேர்தல் முடிவை அறிவிக்காததால் தமது வெற்றியை உறுதிப்படுத்த கோரி தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் இராமன் வழக்கு தொடுத்தார்.
இராமன் தொடுத்த வழக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் நடைபெறும் என்று வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாரான் மரத்தாண்டவர் ஆலய துணைத் தலைவர் மதுரவேலு, பொருளாளர் டத்தோ மோகனா கிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.