
ஈப்போ, ஜுலை.23: புந்தோங்கில் அமைந்துள்ள ஐ ஆர் சி கிளப் தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த கிளப்பிற்கு ஏற்கனவே பேராக் மாநில அரசாங்கம் 25 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கி விட்டது.
மேலும் 25 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்று கர்மவீரர் காமராஜர் சிலை நிறுவிய முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்டபோது பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
அதுமட்டுமின்றி, இந்த கிளப்பின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் கார் நிறுத்தும் இடமொன்றை உருவாக்கவுள்ளனர். இந்த நிலத்தை பேராக் மாநில அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற விண்ணப்பம் செய்யப்படும்.
இவ்விவகாரம் குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இந்த நிலத்தை கிடைக்கப் பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் மஞ்சோங் மாவட்டத்தில் சித்தியவான் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைத்து விட்டது. இந்த ஆலயம் 1936 ல் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், இவ்வளவு காலமாக இந்த ஆலய நிர்வாகம் வெறுமனே இருந்து விட்டு பிறகு தம்மை நாடியதாகவும், ஒரு தனிநபரின் வெற்று வாக்குறுதியால் ஏமாந்துவிட்டதாக அவர்கள் கூறினர். அதற்கான ஒப்புதல் கடிதமும் தம்மிடம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் இதர நாட்டு பேராளர்கள் இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை மேற்கொண்டதற்கு நன்றியை தெரிவித்தார் அ.சிவநேசன்.
கர்மவீரர் காமராஜர் பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாமனிதனை தோற்கடித்தவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழர்களே அல்லது இதர நாட்டு தமிழர்கள் அவரை தோற்கடிக்கவில்லை என்று உணர்ந்து பேச வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் மு.குலசேகரன் மற்றும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் மற்றும் அயல்நாட்டு பேராளர்கள் , புந்தோங் வாழ் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இரவு விருந்தோம்லுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.