
சுபாங், ஜூலை 31 – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்கி இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து செயல்பட இருக்கும் ஆறு விமான நிறுவனங்கள் குறுகிய உடலமைப்பு கொண்ட விமானங்களைப் பயன்படுத்தும்.
ஃபயர்பிளை, ஏர் ஏசியா மலேசியா, பாத்தேக் ஏர் மலேசியா, எஸ்கேஎஸ் ஏர்வேய்ஸ், டிரான்ஸ்நூசா மற்றும் ஸ்கூட் பிரைவேட் லிமிடெட் ஆகியவையே அந்த ஆறு நிறுவனங்களாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
சுபாங் விமான நிலையத்திலிருந்து புறப்படும் முதல் விமானமாக மலேசியாவின் பாத்தேக் ஏர் விளங்கும். அந்த விமானம் ஆகஸ்டு 1 ஆம் தேதி மதியம் பினாங்கிற்கு புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நாளில் பிற்பகல் 2.00 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து டிரான்ஸ்நூசா விமானம் இங்கு வந்தடையும் என்று அவர் சுபாங் விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த விமான நிலையம் குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் இருப்பதால் நள்ளிரவு வேளையில் விமானச் சேவை மேற்கொள்ளப் படாது. மாறாக, அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விமானச் சேவைகள் இருக்கும் என்றார் அவர்.