
பாரிஸ், ஜூலை 31-
நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற விருக்கும் ஒலிம்பிக் 2024 மகளிர் இரட்டையர் பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் தேசிய மகளிர் இரட்டையர்களான பெயர்லி தான் – மு.தீனா ஜோடி ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர்களான தென்கொரியாவின் கிமி சூ இயோங்- கோங் யீ யோங் இணையைச் சந்திக்கவுள்ளது.
குழு நிலையிலான போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில் நாக் அவுட் எனப்படும் தோற்றால் வெளியேறும் கட்டத்திற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது.
அந்த குலுக்கலின் படி காலிறுதிச் சுற்றில் கடந்த 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சூ இயோங்- ஹி யோங் ஜோடியுடன் பெயர்லி-தினா ஜோடி களம் காணவிருக்கிறது.
ஆகக் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இவ்விரு ஜோடிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அந்த 2021 உலக டூவர் ஃபைனல் குழு ஆட்டத்தில் அந்த கொரிய ஜோடி 21 -14 மற்றும் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகின் பத்தாம் நிலை ஜோடியும் 2022 பெர்மிங்ஹாம் காமன்வெல்த் சாம்பியனுமான அந்த தென்கொரிய இணையை பேர்லி தான் – மு.தீனா ஜோடி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற காத்துக் கொண்டிருக்கிறது.