
கோலாலம்பூர், ஆக 1 ஹமாஸ் தேசியத் தலைவரும் அதன் அரசியல் அமைப்பின் தலைவருமான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அதன் அரசியல் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாங்கள் ஹனியே கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறோம்.இப் பிராந்தியத்தில் உலகளாவிய கவலை மற்றும் ஆபத்து அதிகரிப்பதற்கான அபாயத்தைக் காண்கிறோம் என்று லெபனான் பிரதமர் நஜிப் மிகடி கூறியதாக இர்னா எனப்படும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, இந்த கொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்த துருக்கிய வெளியுறவு அமைச்சு, தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு உயிர்த் தியாகம் செய்த ஹனியே போன்ற லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம் என் கூறியது.