
திருவனந்தபுரம்: வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை பகுதியில் மட்டும் 350க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
250 பேரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முன்தினம் அதிகாலை இங்குள்ள சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வீடுகளோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.