
ஷா ஆலம், ஆக 2– வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் 200,000 மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்கான சரியான தடத்தில் சிலாங்கூர் செல்கிறது என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.
சிலாங்கூர்கூ முன்னெடுப்பின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 40,000 வீடுகளை கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி மேம்பாடு கண்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஒவ்வொரு ஆண்டும் 40,000 வீடுகள் என்ற எண்ணிக்கையில் வரும் 2026ஆம் ஆண்டிற்குள் 200,000 மலிவு விலையில் வீடுகளை கட்டுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
எங்கள் பதிவுகளின் அடிப்படையில் அந்த இலக்கு அடையப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான செயல்முறையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
ரூமா சிலாங்கூர்கூ வீடமைப்புக் கொள்கையை நாங்கள் 2.0 இல்
இருந்து 3.0க்கு மாற்றியுள்ளோம். இதன் மூலம் விவேக வாடகைத் திட்டத்திற்கு ரூமா இடாமான் மற்றும் ரூமா ஹராப்பான் திட்ட வீடுகளைப் பயன்படுத்த முடியும் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.