2,000 ஏக்கர் கல்வித் தோட்டத்தின் கணக்கறிக்கை , வாரிய இயக்குநர்கள் பட்டியலை 7 நாட்களில் சமர்பிக்கவும்! பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் வேண்டுகோள்

ஈப்போ, ஆக.2 : பேராக் மாநில இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியம், 2000 ஏக்கர் கல்வித்தோட்டம் குறித்த கணக்கறிக்கை மற்றும் அதன் வாரிய இயக்குநர்கள் பற்றிய தகவலை 7 நாட்களுக்குள் பேராக் மாநில அரசாங்கத்திடம் சமர்பிக்கும்படி கடிதம் ஒன்றை அந்த அறவாரியத்திடம் வழங்கியுள்ளதாக பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

பேராக் மாநிலத்தில் இந்திய மாணவர்கள் கல்வியுதவிக்காக இன்னமும் என்னுடைய பணிமனைக்கு வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால் இந்த அறவாரியம் மாணவர்களுக்கு உதவவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் இந்த அறவாரியம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த 2,000 ஏக்கர் கல்வித்தோட்டம் பேராக் மாநில இந்திய மாணவர்களின் சொத்துடைமையாகும்.

இது பேராக் மாநில அரசாங்கத்தின் கண்கானிப்பில் இருந்து வருகிறது. ஆகையால், இந்த அறவாரியம் தமது கணக்கறிக்கை மற்றும் அதன் வாரிய இயக்குநர்கள் குறித்த முழுதகவலை அடையாள அட்டை நகலுடன் சமர்பிக்கும்படி அவர் உத்தரவிட்டார்.

இந்த கல்வித்தோட்டத்தின் வாரிய இயக்குநர்கள் பேராக் மாநிலத்தில் வசிக்கவில்லை. ஆதலால், அவர்கள் இவ்வாரிய இயக்குநராக செயல்பட தேவையில்லை. அவர்கள் ராஜினாமா செய்வது சிறப்பாகும்.

அவர்களுக்கு பதிலாக பேராக் மாநில மண்ணின் மைந்தர்கள் நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும். இங்கும் நன்கு படித்தவர்களும் மக்கள் சேவை செய்தவர்களும் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திலிருந்து அதன் தலைவர் இந்த அறவாரியத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டது என்னுடைய வற்புறத்தலால் என்று அ.சிவநேசன் கூறினார்.

ஆனால், அம்மன்றத்தின் செயல்பாடும், நிலைப்பாடும் கேள்விக்குறியாகவே உள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அவர்களின் பங்களிப்புதான் என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles