கோலாலம்பூர், ஆக 3 – இலகு ரயில் 3 (எல்.ஆர்.டி. 3) கட்டுமான தளத்தில் கேபிள் எனப்படும் மின்கம்பிகளை கொள்ளையிட்டு வந்தக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் மூன்று கட்டுமானத் தளங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார் ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஐந்து தொழிலாளர்களை கைது செய்தனர்.
அந்த ஐவரும் ஷா ஆலம் மற்றும் டாமன்சாராவில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டச் சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
ஷா ஆலம் செக்சன் 2இல் உள்ள ஜாலான் பெர்சியாரான் ராஜா மூடா, செக்சன் 14, பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் காயு ஆரா டாமன்சாரா ஆகிய இடங்களிலுள்ள எல்.ஆர்.டி. 3 கட்டுமான தளங்களில் இச்சோதனை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு நிசான் சென்ட்ரா வாகனம், ஒரு சாவி மற்றும் ஆறு கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.