
கோலாலம்பூர், ஆக 3 – தியோ பெங் ஹோக்கின் மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் நடத்தப்பட்டால் அந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் போலீசார் மீண்டும் விசாரணை செய்வர்.
இறந்தவரின் குடும்பத்தினர் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்வது குறித்து முடிவெடுப்பதற்கு முன் அனைத்து அம்சங்களும் மதிப்பீடு செய்யப்படும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் நாங்கள் வழக்கை மறுபரிசீலனை செய்வோம். விசாரணையை மீண்டும் திறக்கும்போதுசம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் ஆராயப்படும்.
மேலும் பெங் ஹோக்கின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் விசாரணைக்கு அழைப்போம் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தியோ பெங் ஹோக்கின் மரணம் தொடர்பான விசாரணையை காவல்துறை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்த முறை இந்த விசாரணை வெளியார் தலையீடு இல்லாமல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்தப்படும் என்றும் இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2014 செப்டம்பர் 5ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.