
கோலாலம்பூர், ஆக 3- ஜாலான் அம்பாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 2007ஆம் ஆண்டு மனித வர்த்தகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் (எதிப்சோம்) உள்பட பல்வேறு குற்றங்களுக்காக இரு சிறார்கள் உள்பட இருபது பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று காலை 10.30 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் இரண்டு முதல் 20 வயது வரையிலான 14 நைஜீரிய நாட்டினர், மூன்று டான்சானியா பிரஜைகள், இரு உகாண்டா நாட்டினர் மற்றும் ஒரு மாலத் தீவு பிரஜை கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது
ஜைன் கூறினார்.
அவர்கள் அனைவரும் எதிப்சோம் சட்டத்தின் 12 பிரிவு, 55டி பிரிவு, 15(1)(சி) பிரிவு, 6(1)(சி) பிரிவு மற்றும் குடிநுழைவுத் துறைச் சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 24 வயது டான்சானியா பெண் ஒருவரையும் இச்சோதனையின் போது தாங்கள் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.