
தஞ்சோங் மாலிம்,ஆக03: பேரா மாநிலத்தில் தற்போது இருக்கும் ஆலயங்களே போதுமானது.புதிய ஆலயங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காதீர்கள் என மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலப்பிரிவு ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் அறிவுறுத்தினார்.
பேரா மாநிலத்தில் நடப்பில் 600க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கும் சூழலில் புதிய ஆலயங்கள் தேவைப்படாது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,ஆலயங்கள் சமய செயல்பாடுகளுடன் சமூக காரியங்களிலும் முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இங்குள்ள பேராங் ஸ்டேசன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழாவில் சிறப்பு வருகை புரிந்த சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.
மேலும்,பேரா மாநிலத்தில் ஆலயங்களின் மேம்பாடுகளுக்கும் அதன் நனிச் சிறந்த செயல்பாடுகளுக்கும் மாநில அரசாங்கம் பெரும் பங்காற்றி வருவதாகவும் ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலம் உட்பட பல்வேறு சிக்கல்களுக்கு தாம் தொடர்ந்து தீர்வுகளை ஏற்படுத்தியும் வருவதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,பேராங் ஸ்டேசனின் இந்த ஆலயம் இரயில்வே நிலத்தில் இருப்பதாகவும் இதுகுறித்து ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தோடு கலந்தாலோசித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க முனையப்படும் என்றும் கூறிய சுங்க சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாலயத்திற்கு வெ.25 ஆயிரத்தை மானியமாக அறிவித்தார்.
மிகவும் சிறப்பாக நடந்தேறிய வருடாந்திர திருவிழாவிற்கு வட்டார பொது மக்களுடன் வட்டார கவுன்சிலர்கள்,கிராமத்து தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.