கோலாலம்பூர் ஆக 5-
பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறைக்காண ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் மதிப்புக்குரிய அ.சிவநேசன் இந்துக்கள் புதிய ஆலயங்களை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கிறார்.
அவரின் இந்த கருத்து குறிப்பாக பேராக் மாநிலத்தில் வாழும் இந்துக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்று பகாங் மாநில உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய ஆலயங்கள் கட்டப்படக் கூடாது என்று எதனை அடிப்படையாக கொண்டு மதிப்புக்குரிய திரு. சிவநேசன் அவர்கள் கூறுகிறார் ?
புதிதாக கோயில்கள் கட்டுவதால் ஏற்படும் பாதகங்கள் குறித்து இவர் ஏதேனும் ஆய்வுகள் செய்தப் பிறகு அதன் அடிப்படையில் தான் அவர் அவ்வாறு கருத்து பதிவு செய்துள்ளாரா என்பதை அ.சிவநேசன் தெளிவு படுத்த வேண்டும் என்றும் திரு. கணேசன் கேட்டுக்கொண்டார்.
நாம் அனைவரும் நேசிக்கும் மலேசிய திருநாட்டில் இந்தியர்கள் வாழ்கிறோம் என்பதற்கு இன்றளவும் மிக முக்கியமான வரலாற்று சான்றுகளாக தமிழ்ப்பள்ளியும், கோவில்களும் மட்டுமே அமைந்துள்ளன என்றால் அது மிகையாகாது.
உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், இந்தியர்கள் அதுவும் குறிப்பாக தமிழர்கள் கலாச்சாரம், அடையாளம் மற்றும் மரபுகளை வலுவாக பின்பற்றி வருவதால் தமிழர்களின் சமயத்தை, வரலாற்றை தாங்கள் வழிபடும் ஆலயங்களின் வழி மேலும் வேறுன்ற செய்து வருகிறனர்.
அதன் அடிப்படையிலும் இறை நம்பிக்கையின் அடையாளமாகவும், மற்றும் இந்துக்களின் தொன்று தொட்ட வரலாற்றையும், நாகரிகத்தையும் கோயில்களின் கட்டிட கலை மூலமாகவும் நாம் உலகுக்கு இன்றளவும் வெளிப்படுத்தி வருகிறோம்.
அதற்கு மிக உறுதியான சான்றாக நமது ஆலயங்கள் அமைந்து வருகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டில்
ஏற்படும் பல்வேறு காரணங்களால் குறிப்பாக பொருளாதாரம், கல்வி, சமூக அரசியல் மாற்றங்களால் மக்களின் இடப்பெயர்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
அதை தவிர்க்க இயலாது.
அவ்வாறு புதிய மாற்றங்கள் ஏற்படும் பொழுது புதிய இடங்களில் புதிய ஆலயங்கள் உருவாவதும் காலத்தின் கட்டாயம்.
அதையும் தவிர்க்க இயலாது.
பல கோவில்களில் நிலம் பற்றாக்குறையால் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கலாம் மற்றும் பழுதடைந்த கோவில்களை சரி செய்யவும் அதன் பராமரிப்பு செலவும் அதிகமாக இருப்பதல் அதற்கு மாற்றாக புதிய இடங்களில் புதிய ஆலயங்கள் கட்டப் படுவது ஒன்றும் புதிதல்ல.
புதிய கோவில்கள் கட்டப்படுவதால் இந்துக்களுக்கு என்ன சிக்கல் ஏற்படபோகிறது என்பது குறித்து மதிப்புக்குரிய திரு அ.சிவநேசன் அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று திரு. கணேசன் கேட்டுக் கொண்டார்.
பேராக் மாநிலத்தில் புதிய ஆலயங்கள்
கட்டப்பட கூடாது என்றால், ஏற்கனவே செயல்பட்டுகொண்டிருக்கும் பல ஆலயங்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுவிட்டதா என்பதையும் அ.சிவநேசன் அவர்கள் உறுதிப் படுத்த வேண்டும் என்று திரு. கணேசன் மேலும் வலியுறுத்தினார்