ருக்குன் தெத்தாங்கா மண்டபம் எப்படி சட்டவிரோத கட்டடமாக மாறியது? டத்தோ டி. மோகன் ஆவேசம்!

கோலாலம்பூர்: ஆக. 8-
மலேசிய கராத்தே மாஸ்டர் பொன்னையா குடும்பத்தின் கராத்தே சாதனை மீதான பொறாமையால் ருக்குன் தெத்தாங்கா மண்டபம் சட்டவிரோத கட்டடமாக மாறியுள்ளதா என்று சுக்கிம் எனப்படும் மலேசிய இந்திய விளையாட்டு, கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் இக்கேள்வியை எழுப்பினார்.

சிகாம்புட் தாமான் ஶ்ரீ சினாரில் உள்ள ருக்குன் தெதாங்கா மண்டபத்தில் மாஸ்டர் பொன்னையா குடும்பத்தினர் கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இம்மண்டபத்தின் ஒரு பகுதி நேற்று உடைக்கப்பட்டது.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஹன்னா இயோ, சட்டவிரோத கட்டடம் தான் உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட மண்டபம் 30 வருடங்களுக்கு முன்னர் ருக்குன் தெடங்காவினால் நிர்மாணிக்கப்பட்டது என்று டத்தோ மோகன் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஹயாஷி ஹா கராத்தே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக இது செயல்பட்டு வந்தது.

அங்கு பெரும்பாலோர் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர்கள் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்றவர்கள், பெற்றுக் கொண்டிருப்பவர்கள் என அனைவரும் பல்லினத்தவர்களை சேர்ந்தவர்களாவர்.

ஆனால் இது எப்படி சட்டவிரோதமான கட்டிடமாக மாறியது என்பது அனைவரின் கேள்வியாகும். மேலும் மாஸ்டர் பொன்னையா குடும்பத்தினர் கராத்தேவில் சாதித்து வருவதைக் கண்டு பொறாமைப்படும் சிலருக்கு அமைச்சர் துணையாக மாறிவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது என்றார்.

மாஸ்டர் பொன்னையா குடும்பத்தினர் கராத்தேவில் சிறந்து விளங்கும் பல சாதனையாளர்களை உருவாக்க பயிற்சிகளை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைத்துலக, ஆசிய, சுக்மா, சீ விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை குவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் குறித்து குடியிருப்போர் சங்கத்திடம் இருந்து புகார்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த மண்டபத்தை இடிக்கப்படுவதற்கான அரசியல் அழுத்தம் உள்நோக்கமாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக டத்தோ மோகன் கூறினார்.

இவ்விடத்தில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் இருந்து மாஸ்டர் பொன்னையா குடும்பத்திற்கு அனுமதி கடிதம் கிடைத்துள்ளது.

ஆனால் அதற்கு அமைச்சரும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோவிடம் இருந்து அவர்கள் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

இதற்காக பொன்னையா குடும்பத்தினர் அமைச்சரை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அம்முயற்சிகள் அனைத்து தோல்வியில் முடிந்தது. ஒரு பொறுப்புள்ள அமைச்சர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இப்ப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும்.
ஆனால் இங்கே மையத்தை இடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஆர்வமாக இருந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஹன்னா இயோ அமைச்சராக தனது கடமையை ஆற்றுவதில் தோல்வி அடைந்து விட்டார். ஆகவே இவ்விவகாரத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவியை மரியாதையுடன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டத்தோ டி. மோகன் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles