மா.பவளச்செல்வம்
பத்துகேவஸ்: ஆக 8-
கின்னஸ் உலக சாதனைக்காக ஓரியண்டல் டிரம்ஸ் வாசிக்கும் இசை விழாவில் 500 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்துவார்கள் என்று
மலேசிய மக்கள் சக்தி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.
பாய் சி யின் கலை, கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.
சீனா, மலேசியா இரு நாடுகளில் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 4,000 பேர் ஒரே நேரத்தில் சீன பாரம்பரிய இசைக் கருவியான ஓரியண்டல் டிரம்ஸை வாசிக்கவுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
இம்மாபெரும் சாதனை நிகழ்வில் இந்தியர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சக்தி அறவாரியம் முயற்சிகளை மேற்கொண்டது என்று அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் சக்தி அறவாரியத்தின் கீழ் 300 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அம்மாணவர்கள் அனைவருக்கும் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆக மொத்தத்தில் கிட்டத்தட்ட 500 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பத்துமலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சிகளை நேரடியாக பார்வையிட்ட டத்தோஶ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ரமேஷ், உதவித் தலைவர்கள் குகனேஸ்வரன், மணிவண்ணன் உட்பட பலர் இப்பயிற்சிகளை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.