ஷா ஆலம், ஆக 14-
அடுத்த வாரம் சரவாக் கில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் பங்கேற்கவிருக்கும் சிலாங்கூர் கபடிக்
குழுவுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ்
மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற
உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ ஆகியோர் தலா 5,000 வெள்ளியை
நன்கொடையாக வழங்கினர்.
சுக்மாவில் இடம் பெற்றுள்ள இந்திய பாரம்பரிய விளையாட்டான கபடிப்
போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் குழுவினருக்கு உரிய ஆதரவை
வழங்கும் அதேவேளையில் அந்த விளையாட்டின் முக்கியத்துத்தையும்
அதன் மீதான ஆர்வத்தையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டு இந்த நிதி வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
தெரிவித்தார்.
நவீன விளையாட்டுகள் மற்றும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்
என்ற பேதமின்றி அனைத்து விளையாட்டுகளுக்கும் ஆதரவு தருவதை
மாநில அரசும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தாமும் கடப்பாடு
கொண்டுள்ளோம்.
அதே சமயம் விளையாட்டுகளின் பின்னணி மற்றும்
இனம் சார்ந்த விளையாட்டாளர்களின் பங்கேற்பை நாங்கள் கருத்தில்
கொள்வதில்லை.
மாறாக, மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அங்கமாக
இதனைப் பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
சரவாக் சுக்மா போட்டியில் சிலாங்கூர் கபடி குழு தங்கம் வெல்ல போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.