ஷா ஆலம், ஆக 14-
சரவாக் மாநிலத்தில் நடைபெறும் 2024 சுக்மா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றால் 10,000 வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
10,000 வெள்ளியை வெகுமதியாக வழங்கும் மற்றொரு மாநிலம் ஜொகூர் ஆகும்.
தங்கப் பதக்க வெற்றியாளர்ளுக்கு பகாங் 6,000 வெள்ளியை வழங்குகிறது.
அதே சமயம் பெர்லிஸ், பேராக், கூட்டரசு பிரதேசம், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 5,000 வெள்ளியை வெகுமதியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
சிலாங்கூரில் ஐந்து நபர்களுக்குக் குறைவான குழு போட்டிகளில் தங்கம் வெல்லும் பட்சத்தில் ஒவ்வொரு விளையாட்டாளருக்கும் தலா 5,000 வெள்ளியும் ஐந்துக்கும் அதிகமானோரைக் கொண்ட குழு போட்டிகளில் தங்கம் வென்றால் ஒரு நபருக்கு 3,000 வெள்ளியும் வழங்கப்படும்.
இது கடந்த 2022ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் வழங்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.