சிறுபான்மை மக்களின் நலன்கள் காக்கப்படும்!
வங்காளதேச இடைக்கால அரசு தலைவர் முகமட் யூனுஸ் உத்தரவாதம் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு
புத்ரா ஜெயா, ஆக 14-
வங்காளதேசத்தில் உள்ள சிறுபாண்மையினரின் நலன்கள் காக்கப்படும் என்று வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான பேராசிரியர் முகமட் யூனுஸ் உத்தரவாதம் அளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வங்காளதேச மக்களுக்கும் அங்கு வாழும் சிறுபாண்மையினருக்கும் ஒரே நிலையான, நியாயமான, சமமான அளவில் வழிநடத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் பேராசிரியர் முகமட் யூனுஸிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொலைபேசி வழி அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.
மலேசியாவுடன் பேராசிரியர் முகமட் யூனுஸ் நல்ல உறவு கொண்டுள்ளார். இந்நிலையில் வங்காளதேசத்தில் அமைதியை நிலைநாட்ட மலேசியா பல்வேறு கட்ட உதவிகளை வழங்கிட தயாராகவுள்ளோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், வங்காளதேசத்திற்குக் குறுகிய கால பயணத்தை மேற்கொள்ள தமக்கு அவர் அழைப்பு விடுத்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பெர்னாமா