கோலாலம்பூர், ஆக. 15 – பிளாசா மெட்ரோ காஜாங்கில் உள்ள நகைக் கடையில் கடந்த ஜூன் மாதம் கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதம் ஏந்திய கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை காஜாங் சில்க் விரைவுச் சாலையின் சுங்கை பாலாக் டோல் சாவடி அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அதன் உறுப்பினர்கள் அடையாளம் காணப் பட்டதாக சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.
அக்கும்பலின் எஞ்சிய உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில் அவர்கள் சிலாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுவதால் அவர்களில் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கும்பலின் உறுப்பினர்கள் ஆயுதம் ஏந்தியிருப்பதோடு சிலாங்கூரைச் சுற்றியுள்ள பகுதியில் தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறை நம்புகிறது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
bernama