
கோலாலம்பூர் ஆக 21-
மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை தொடங்கப்படுவது பெரும் பாராட்டுக்குரியது என்று மலேசிய இந்தியர் சிறுதொழில் வணிகர் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்ட மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகள் இடையிலான உறவுகள், வர்த்தகம் தொழில் நுட்பம் உட்பட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது மலாயா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கையை நிறுவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உடனே ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கினார்.
இது, மலேசியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும் என்று டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.
இதன்மூலம, திருக்குறள் அனைத்து மக்களிடமும் சென்றடையும். அதைப்போல, திருவள்ளுவரின் பெருமையையும் உலகு நன்குஅறிய வாய்ப்பேற்படும்.
இந்த நல்ல கோரிக்கையை முன்வைத்த இந்திய பிரதமர் மோடிக்கும் உடனே ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.