கோலாலம்பூர் ஆக 22-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் யாரும் அத்துமீறி நுழைய வேண்டாம் என கோவில் ஆலோசகர் மற்றும் ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் மேம்பாட்டு நிறுவனம் சொந்தமாக கோவிலை கட்டிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு பல போராட்டத்திற்கு மத்தியில் இந்த புதிய இடத்தில் நிலத்தை பெற்றுள்ளோம். இந்த இடத்திற்கு மாறிச்செல்ல கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆனால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமலேயே மேம்பாட்டு நிறுவனம் தனது தொழிலாளர்களை வைத்து கோவிலை கட்டிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் சொன்னார்.
கோவில் நிலத்தின் முன் கேட் அமைத்து பேனரையும் தொங்க விட்டிருக்கிறோம்.
ஆகவே எந்த ஒரு தரப்பும் இந்த நிலத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.கோவில் செயலாளர் ஹரிஹரன் கோவில் கட்டுமான பணிகள் அமைப்பது தொடர்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஆகவே யாரும் இடையூறு விளைவிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
செந்தூல் ஜாலான் மானீஸ் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஐயப்பன் கோயில் செயலாளர் பிரேம் குமார் உட்பட பலரும் இன்று கோவில் நிலத்தை பார்வையிட்டு யாரும் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.