
புதுடில்லி ஆக 22-
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது மிகவும் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும், ஒழுங்காகவும் இருக்கும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
மேலும் மலேசிய மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையே ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதன் மூலம் சுரண்டல் போன்ற மோசமான நடைமுறைகளைத் தடுக்கும் என்றார் அவர்.
அசல் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014 இல் காலாவதியானது, இதன் விளைவாக இந்தியாவில் இருந்து பணியாளர்களை நிர்வகிப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இல்லை
இப்போது ஐஎல்ஓ எனப்படும் அனைத்துலக தொழிலாளர் சம்மேளனத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது தொடர்பில் மலேசியா – இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பில் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர் சொன்னார்.
இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தியா பிரதமர் மோடி முன்னிலையில் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் இந்தியா வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.