மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய விவகாரம்:ஆவணங்கள் களவா?அவசரக் கூட்டத்தை சாதகமாக்கச் சதியா?

பெந்தோங், ஆக.23-
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத் தலைவர் பதவிக்கான குடுமிப் புடி சண்டை நீதிமன்ற வாசல் வரை சென்றிருக்கும் நிலையில், அலுவலக ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாக இன்னொரு பூதாகரத் தகவல் வெடித்துள்ளது.

ஆலயத்தின் இதற்கு முந்தைய தலைவர் டத்தோ க.தமிழ்செல்வன் தலைமையிலான செயலாளரும் அவர்தம் குழுவினரும் ஆலய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, உறுப்பினர் விவரம் உள்ளிட்ட இதர சில ஆவணங்களை களவாடிச் சென்றுள்ளதாக, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.ராமன் தரப்பினர் புலனம் வழி தகவல் பரப்பி வருகின்றனர்.

எனினும், ஆலயத்தின் செயலாளர் முனைவர் ஜெயாந்திரன்
இத்தகவலை முற்றாக நிராகரித்துள்ளார். தன் மீதான நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஒரு தரப்பினர் திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முறையே போலீஸ் புகாரும் செய்யப்பட்டிருப்பதாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:-
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் குளறுபடிகள் நிலவியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தல் முழுமைப்பெறாமல் நின்று போனது.

பின்னர் இவ்விவகாரம் பகாங் மாநில சங்கங்களின் பதிவு இலாகாவுக்குக் (ஆர்.ஓ.எஸ்) கொண்டுச் செல்லப்பட்டும், ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதால், தற்போது தீர்வுக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ நிர்வாகம் அமையப்பெறும் வரையில் ஆலய அலுவலகத்திற்குள் நுழைவதற்கும் முக்கிய ஆவணங்களை பத்திரமாகக் கையாளுவதற்குமான அதிகாரத்தை செயலாளர் என்ற முறையில் நான் கொண்டிருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக, நான் எந்தத் தரப்பினர் பக்கமும் சாயாமல், நடுநிலை வகிப்பதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் எந்தத் தரப்பினர் என் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பெற விரும்பினாலும் அதற்கு என் வழக்கறிஞர் மூலமாக முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று் ஒரு செய்தி அறிக்கையும் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன்.

அதனைத்தொடர்ந்து, எதிர்தரப்பினர் என் வழக்கறிஞருடன் முறையே எழுத்துப்பூர்வமாகத் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெறத் தவறினர். நானும் என் வழக்கறிஞரின் ஆலோசனை இன்றி, ஆவணங்களை அத்தரப்பினரிடம் நேரடியாகத் தருவதற்கு பல முறை யோசித்தேன். காரணம், அதிகாரப்பூர்வ கைகளிடம் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அவசரத்தில் ஒரு தரப்பிடம் ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, அதன் பிறகு இன்னொரு தரப்பு வந்து நான்தான் அதிகாரப்பூர்வத் தரப்பு என்று நீதிமன்ற உத்தரவோடு வந்தால் நான் செய்ய இயலும் என்றுதான் நான் சிந்தித்தேன்.

ஆதலால், எத்தரப்பாக இருந்தாலும் என் வழக்கறிஞருக்கு முறையே எழுத்துப்பூர்வமாகத் தொடர்பு கொண்டிருந்தால் நான் முழு ஒத்துழைப்பை வழங்கியிருப்பேன். ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் அப்படி ஏதும் செய்யாமல், நானும் என் சகாக்களும் ஆலய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை களவாடியதாக ஒரு கதையைக் கட்டவிழ்த்து விட்டு, நாங்கள் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த சிசிடிவி காட்சி வெளியாக்கி, என் மீது அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

இதனை நான் வன்மையாகக் கண்டிருக்கின்றேன். நான் ஆலய ஆவணங்களை திருடி வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப்போகின்றேன்? ஒரு செயலாளர் என்ற முறையில் அவற்றை பாதுகாக்கும் கடப்பாட்டில் நான் இருக்கின்றேனே தவிர, வேறு எந்தவொரு தீங்கான நோக்கமும் என்ன இல்லை. இதற்கு முன்னும், நான் நடுநிலை வகிப்பதையும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆலய நிர்வாக விவகாரத்தில் எனக்கு எவ்வித உள்நோக்கமும் சதித்திட்டமும் இல்லை.

இதற்கிடையில், பி.ராமன் தரப்பிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் ஆலயத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்வியுற்றேன். மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்காததற்குக் காரணம், உறுப்பினர் விவரங்கள் களவாடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும் கேள்வியுற்றேன்.

இச்சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது, தங்களுக்கு வேண்டிய உறுப்பினர்களை மட்டும் அழைத்து வந்து அவசரக் கூட்டம் கூட்டி, நிர்வாகத்தைத் தேர்வு செய்வதற்கான சூழ்ச்சி மறைமுகாமக அரங்கேற்றப்படுவதாக நான் உணர்கிறேன். மற்றவர்களை அழைக்காததற்கு, நான் ஆவணங்களை திருடிவிட்டதாகச் சொல்லி தங்களின் சதித்திட்டதிற்குக் காரணம் பூச முயல்கிறார்கள் என்று உணர்கிறேன்.

இதனிடையே, கடந்த ஞாயிறன்று என் வழக்கறிஞர் ஆலயத்தின் ஆவணங்களை ஒப்படைப்பதாகச் சொல்லி, பி.ராமன் தரப்பினரை ஆலய அலுவலகத்திற்கு வரச் சொன்னார். குறிப்பிட்ட நேரத்தில் அவர் அங்கு காத்திருந்தார். ராமன் தரப்பினர் வரவே இல்லை; எங்களிடமிருந்து ஆவணங்களை பெறுவதற்கான வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது உறுதிப்படுத்தும் வகையில், அன்றைய தினமே ஆலய வளாகத்திலிருந்து வீடியோ காட்சி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இதுவே உண்மை நிலவரம்! ஆனால், ஒரு தரப்பினர் வேண்டுமென்றே என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கங்கணம் கட்டி, அபாண்ட குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.

இது குறித்து முறையே போலீஸ் புகார் செய்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளேன். மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய விவாகரத்தில் உண்மை தானாகவே ஒரு நாள் வெளிவரும் என முனைவர் ஜெயாந்திரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles