செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர்: ஆக 24-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலுள்ள மலாயான் மன்ஷன் எதிரே ஏற்பட்ட நீர் அமிழ்வில் சிக்கிக் கொண்ட இந்தியச் சுற்றுப் பயணி விஜயலெட்சுமி புதையுண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
தற்போது அவரை தேடும் பணி தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மஸ்ஜித் இந்தியா முழுவதும் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் திட்டமிடல் பிரிவு மற்றும் தீயணைப்பு படை உறுதி செய்ய வேண்டும் என்று டத்தோ ஹாஜி அப்துல் கேட்டுக் கொண்டார்.
நீர் மண் அரிப்பால் மஸ்ஜித் இந்தியா வளாகம் இப்போது பெரும் அச்சத்தை எதிர் நோக்கி இருக்கிறது.
ஆகவே இந்த வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மேற்கொண்டு வரும் பணிகளை டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், சங்கத்தின் செயலாளர் எஸ். வீரபாலன் ஆச்சாரி, டின் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டத்தோ சீராஜியுதின் உட்பட நகைக்கடை உரிமையாளர்கள் பார்வையிட்டனர்.
மஸ்ஜித் இந்தியாவில் பல இடங்களில் சாலை அடைப்பு போடப்பட்டிருப்பதால் மக்கள் வர தயங்குகிறார்கள்.
இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது
பொதுமக்கள் நடமாடும் அளவுக்கு சில பாதைகளை திறந்து விடும்படி அவர் கேட்டுக்கொண்டார்