கோலாலம்பூர், செப். 3 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும்
இடையிலான பொருளாதாரம் மற்றும் விவேக பங்காளித்துவத்தை
வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவதாக தொழில்
துறையினர் வர்ணித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 19 முதல் 21 வரையிலான அந்த மூன்று நாள் பயணம்
இரு தரப்பு உறவை “விரிவான விவேகப் பங்காளித்துவ நிலைக்கு“
உயர்த்துவதில் வெற்றி கண்டது குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக
மலேசியாவில் உள்ள இந்திய தொழில்துறைகளின் சம்மேளனத்தின்
(சி.ஐ.ஐ.எம்.) தலைவர் டத்தோ உமாங் சர்மா கூறினார்.
இந்த புதிய நிலையிலான ஒத்துழைப்பு வளர்ந்து வரும் துறைகளான
செமிகண்டக்டர், ஃபின்டெக், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொடக்க
நிறுவனத் துறையில் கூட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்த வர்த்தகம் மற்றும் முதலீடுகளுடன் இரு நாடுகளின்
வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள்
நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான
வலுவூட்டப்பட்ட கூட்டுத் திட்டங்கள் வழி மலேசிய தொழில்துறையினர்
இந்தியாவில் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற அவர்
பெர்னாமாவுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறினார்.
ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக இலக்கவியல் பொருளாதாரத்தைச்
சுட்டிக்காட்டிய சர்மா, செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்
மற்றும் கிளைவுட் கம்யூட்டிங் உள்பட தகவல் தொழில்நுட்பம் 2.0
ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார்.
இந்த கூட்டுத் திட்டத்தின் வழி ஃபின்டெக் ஒத்துழைப்புகளும் விரிவாக்கம்
காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் செயற்கை
நுண்ணறிவு பூங்கா மற்றும் திரைப்பட ஸ்டூடியோவை அமைக்க
இந்தியாவின் ஈரோஸ் குழுமம் உறுதியளித்துள்ளது. இதுவொரு நல்ல
தொடக்கமாகும்.
இந்த புதிய ஸ்டூடியோவில் பாலிவூட் திரைப்படங்கள்
உருவாக்கப்படும் என நம்புகிறோம் என சர்மா சொன்னார்.