புத்ராஜெயா, செப் 3 – கோல லங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் சிப்பாட்டில்
கடந்த 2017ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் கொன்று
எரியூட்டியதாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டிலிருந்து வாய் பேச முடியாத
மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி விடுதலை செய்யப்பட்டதை
இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
ஆகவே, காங் சாங் ஹெங் (வயது 45) என்ற அந்த ஆடவர் உயர்
நீதிமன்றத்தில் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என்று நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியான ஒரு தம்பதியரின் 11 வயது
பேரனுக்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டை எதிர்த்து எதிர்வாதம் புரியும்படியும் மேல் முறையீட்டு
நீதிமன்ற நீதிபதிகள் அவ்வாடவருக்கு உத்தரவிட்டனர்.
கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அந்த ஆடவரை விடுவித்த உயர்
நீதிமன்றத்தின் தீர்ப்பை, டத்தோ சே முகமது ருஸிமா கசாலி
தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு ரத்து செய்தது.
நீதிபதி டத்தோ
அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ வோங் கியான் கியோங்
ஆகியோரே இந்த வழக்கில் ஆஜரான இதர இரு நீதிபதிகளாவர்.
இந்த கொலை வழக்கில் காங் குற்றவாளி என்பதற்கான அடிப்படை
முகாந்திரங்கள் இருப்பதை அரசுத் தரப்பு தெள்ளத் தெளிவாக
நிரூபித்துள்ளதாக சே முகமது ருஸிமா தனது தீர்ப்பில் கூறினார்.
தனக்கு எவ்வாறு தீக்காயங்கள் ஏற்பட்டன என்பதை விளக்குவதற்காகக்
காங் நீதிமன்றத்தில் அவசியம் தற்காப்பு வாதம் புரிய வேண்டும்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் சாட்சியம் மற்றும் இதர
ஆதாரங்கள், தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்வதற்கு
தகுந்த சான்றுகள் உள்ளதை நிரூபிக்கிறது என்றார் அவர்.