கோலாலம்பூர், செப். 3 – பாரிஸ் நகரில் நடைபெறும் 2024 பாராலிம்பிக்
போட்டியில் மலேசியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்
தந்த தேசிய பாரா பூப்பந்து விளையாட்டாளரான சியா லீக் ஹோவுக்குப்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்குள்ள போர்டே டின லா செப்லி அரங்கில் நடைபெற்ற பூப்பந்துப்
போட்டியின் ஆண்களுக்கான எஸ்யு5 (உடல் குறைபாடு) தனிநபர் பிரிவில்
இந்தோனேசியாவின் சூர்யோ நுக்ரோவை 21-13, 21-15 என்ற புள்ளிக்
கணக்கில் வீழ்த்தி லீக் ஹோ தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் வழி கடந்த 2020ஆம் ஆண்டு தோக்கியோவில்
நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் பெற்ற
சாதனையை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
லீக் ஹோவைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை
வெளியிட்டுள்ள பிரதமர், நாட்டின் பெயரை அனைத்துலக அரங்கில்
மிளிரச் செய்தது குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.