ஜோர்ஜ் டவுன், செப். 4 – சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு
நிறுவனத்திடம் முடத்தன்மை இழப்பீட்டைப் பெறுவதற்குப் போலி
கோரிக்கையை சமர்ப்பிக்கும் கும்பலுக்கு எதிரான விசாரணையில் உதவும்
பொருட்டு பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவ அதிகாரிகள்
உள்பட 32 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.)
கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய ஊழல்
தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி,
கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மருத்துவமனையின் இரு உயர்
மருத்துவ அதிகாரிகள் மற்றும் தனியார் நிபுணத்துவ மருத்துவமனை
அதிகாரி ஆகியோரும் அடங்குவர் என்றார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச் அதிரடிச் சோதனைகளில்
கைது செய்யப்பட்ட 32 பேரில் பத்தொன்பது சொக்சோ சந்தாதாரர்கள்,
எட்டு முகவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் இரு இடைத் தரகர்கள்
ஆகியோரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சொக்சோ சந்தாரார்களில் பலர் பினாங்கு
மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் துறைமுகத்திலும் வேலை செய்து
வந்ததாகக் கூறிய அவர், விசாரணையின் போது மேலும் பலர் கைது
செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார்.
பெர்னாமா