பத்து வயது மகனை கார் ஓட்ட அனுமதித்த தாய்க்கு வெ.700 அபராதம்!

சிரம்பான், செப். 10
தனது பத்து வயது மகனை கார் ஓட்ட அனுமதித்ததன் வழி சாலை விபத்து ஏற்படக் காரணமாக இருந்த குற்றத்திற்காக பெண்மணி ஒருவருக்கு இங்குள்ள சாலை போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 700 வெள்ளி அபராதம் விதித்தது.

தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை துப்புரவுப் பணியாளரான 46 வயதான அப்பெண்மணி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் மார்லிசா முகமது ஃபாஹ்மி இந்த தண்டனையை விதித்தார்.

கடந்த 3ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் தாமான் அரோவோனா, ஜாலான் அராவோனாவில் டோயோட்டா கொரோலா ரகக் காரை ஓட்டிச் செல்ல தனது 10 வயது மகனை அனுமதித்ததாக அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டாயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஆறு மாதச் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 39(5) பிரிவின் கீழ் அம்மாதுவுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

துணை அரசு வழக்கறிஞர் எம்.புஷ்பா இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

தன் மகனுக்கும் பிற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்தது மூலம் தவற்றை புரிந்துள்ளதால் மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாதுவுக்கு உரிய தண்டனை வழங்கும்படி புஷ்பா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தாம் மாதம் 1,500 வெள்ளியை மட்டுமே வருமானமாகப் பெறுவதோடு பள்ளி செல்லும் மூன்று பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதால் அபராத த் தொகையைக் குறைக்கும்படி அந்த மாது முன்னதாக நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles